
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கில் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் , டெங்குவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு உள்ளதா எனவும், டெங்குவை முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் டெங்குவை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து வரும் 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைதொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் டெங்குவை கட்டுப்படுத்த ரூ. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும் ரூ. 23.50 கோடியில் ரத்த அணுக்கள் சோதனை கருவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், 1.50 லட்சம் பேருக்கு இதுவரை அரசு மருத்துவமனையில் நில வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.