சென்னை மக்களே உஷார்.. இனி மாஸ்க் இல்லாமல் வந்தால்..! அபராதம் வசூல்.. கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு..

Published : Jan 02, 2022, 06:07 PM IST
சென்னை மக்களே உஷார்.. இனி மாஸ்க் இல்லாமல் வந்தால்..! அபராதம் வசூல்.. கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு..

சுருக்கம்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் 2 குழு வீதம் 15 மண்டலங்களுக்கும் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மற்றும் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாளொன்றிற்கு 30,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மருத்துவமணைகளில் உள்ள 1000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும். இதற்கென மண்டலத்திற்கு 2 குழு வீதம் 15 மண்டலங்களுக்கு 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக 20 கார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்றார். 

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட 1000 கொரோனா பணியாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 200 வார்டுக்கு 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கும் பணியை மேற்கொள்வார்கள். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கும் பணிகளையும் மேற்கொள்வார்கள் என்று கூறினார்.

சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும், தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கும் வகையில் 15 மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 கொரோனா பரிசோதனை மையங்கள் கடந்த ஆண்டு செயல்பட்ட இடங்களுக்கு அருகிலேயே ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகையில் செயல்பட்டுவரும் கொரோனா கண்காணிப்பு மையத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!