
தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. தமிழகம் முழுவதும் டெங்குவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சராசரியாக 10 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு சார்பில், டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. நேற்று முன் தினம் அரசு சார்பில் வெளியிடப்பட்ட டெங்கு இறப்பு விவர அறிக்கையில், கடந்த 9-ம் தேதி வரை 40 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை குறைத்து காட்ட சொல்லி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்குமாறு உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால் பாலமுருகன் என்ற சுகாதார ஆய்வாளர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே டெங்குவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் உயிரிழந்துகொண்டிருக்கும் நிலையில், அந்த எண்ணிக்கையை குறைத்து காட்டச்சொல்லி கட்டாயப்படுத்தி சுகாதாரத்துறை ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.