பண்ருட்டியில் இரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி 36 சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்...

First Published Feb 28, 2018, 10:35 AM IST
Highlights
he executives of 36 associations protest for speeding up the railway bridge


கடலூர்

பண்ருட்டியில் இரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி 36 சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள சென்னை சாலையில் இரயில்வே கேட் ஒன்று உள்ளது. இரயில் வரும் நேரங்களில் இந்த கேட் மூடப்படும். அப்போது போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

இதனைத் தவிர்க்க பண்ருட்டியில் உள்ள இரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று ரூ.18 கோடி செலவில் பண்ருட்டியில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது பாலத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும், பாலத்தின் இரு புறமும் சர்வீஸ் சாலை இதுவரை அமைக்கப்படாததால் மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அவ்வழியே சென்று வரமுடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதவிர இரயில்வே மேம்பாலம் அமைக்கும் இடம் அருகே காய்கறி சந்தை உள்ளது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாத காரணத்தால், வாகனங்களில் இந்த மார்க்கெட்டுக்கு காய்கறிகளை முறையாக கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் சர்வீஸ் சாலை அமைப்பதோடு, மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கம், தன்னார்வ அமைப்பு சார்பில் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் வீரப்பன், பொருளாளர் சீனுவாசன், இணை செயலாளர் ரகு, முன்னாள் நகரசபை துணை தலைவர் விஜயரங்கன், சந்திரசேகர், வக்கீல்கள் சீனுஜெயராமன், பக்கிரிசாமி, கோதண்டபாணி, மதன்சந்த், ரோட்டரி சங்க தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"பண்ருட்டியில் சர்வீஸ் சாலை அமைத்து மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்,

சேதமடைந்துள்ள விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும்" என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 36 சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள் உள்பட மக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

 

click me!