தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வளர்த்த கரும்புகள் அறுவடைக்குத் தயார்..

First Published Jan 6, 2017, 9:21 AM IST
Highlights


வடமதுரை,

வடமதுரை பகுதிகளில், தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வளர்த்த கரும்புகள், பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்றன.

வடமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணப்பாடி, செங்குளத்துப்பட்டி, உடையாம்பட்டி, ஐயலூர் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் கண்மாய்களும், கிணறுகளும் வறண்டன.

இதனால், வடமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு, கிணறுகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெருமளவு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.

சாகுபடி பரப்பளவு குறைந்ததால் இந்தப் பகுதி வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து கரும்புகளை வாங்கி விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி முத்துச்சாமி, “வடமதுரை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கரும்புச் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கிணற்று நீர் வற்றி விட்டதால், ஆழ்துளைக் கிணறு அமைத்து வயல்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்சி வந்தோம். ஆழ்துளை கிணற்றிலும் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருக்கிறது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி கரும்புக்கு பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வகையில் தற்போது கரும்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. கடந்த ஆண்டு 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு சாகுபடி குறைந்துள்ளதால் கரும்பிற்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் இனிவரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தால் கரும்பு சாகுபடி செய்வது கேள்விக்குறி ஆகிவிடும்” என்றுத் தெரிவித்தார்.

click me!