பெங்களூரில் இருந்து பிரபல ஆம்னி சொகுசு பேருந்தில் குட்கா போதை பொருள் கடத்தி வந்த நான்கு பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். 150 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக காவல்துறையினர் கஞ்சா குட்கா போன்ற போதை பொருள் விற்பனை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள் தொடர்பாக அவ்வபோது சோதனை நடத்தி வரும் நிலையில் பெங்களூரில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் பிரபல சொகுசு ஆம்னி பேருந்து ஒன்றில் குட்கா போதை பொருள் கடத்துவதாக நெல்லை மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் மேலப்பாளையம் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் வைத்து பெங்களூரில் இருந்து வந்த இன்டர்சிட்டி ஸ்மார்ட் பஸ் என்ற ஆம்னி சொகுசு பேருந்தை நிறுத்த முயன்றனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்றுள்ளார். உடனே காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் மின்னல் வேகத்தில் சினிமா பாணியில் துரத்திச் சென்று நாங்குநேரி அருகே அந்த ஆம்னி பேருந்தை மடக்கிப் பிடித்தனர்.
மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்.. இதுதான் சமூக நீதியா ? திமுகவை வெளுத்து வாங்கிய சீமான் !
பின்னர் உள்ளே சோதனையிட்டபோது பேருந்தின் வெளிப்புறத்தில் உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதியில் சுமார் 10 மூட்டையில் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதைடுத்து பேருந்து ஓட்டுனர்களான பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரன், அருண்குமார் மற்றும் உதவியாளர் பசவராஜ், குட்காவை வாங்க வந்த வியாபாரியான நெல்லை நாங்குநேரி அடுத்த ஆலங்குளத்தை சேர்ந்த ராமதாஸ் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மேலும் ஆம்னி பேருந்து மற்றும் குட்காவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பேருந்தில் மொத்தம் சுமார் 150 கிலோ குட்கா போதைப் பொருள் இருந்தது தெரியவந்துள்ளது. பயணிகளை ஏற்றி செல்லும் பிரபல சொகுசு ஆம்னி பேருந்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை கடலில் மூழ்கும்.. வெளியான பகீர் தகவல்” - சென்னைவாசிகள் அதிர்ச்சி!