
மதுரை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 22–ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவலாளர்கள் சீருடை அணியாமல் காவல் வாகனம் மீது ஏறி பல மீட்டர் தூரத்தில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி தனித்தனியாக பொதுமக்களின் வாய், தலை உள்ளிட்ட உடல் உறுப்புகளை நோக்கி சுட்டனர்.
இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தும்போது விதிமுறைகளை காவலாளர்கள் பின்பற்றவில்லை.
இந்த சம்பவம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் சரியானதாக இருக்காது.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘‘ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் தூத்துக்குடி சம்பவத்தை ஒப்பிட்டு ஊடகங்களில் வந்த செய்திகளை நாங்களும் பார்த்தோம். அங்கு என்ன நடந்தது என்பதை அறிவதில் அனைவருக்கும் அக்கறை உள்ளது’’ என்றனர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.