கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவத்தையடுத்து பள்ளியின் தலைமையாசிரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை 77 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் போன்ற எதையும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது.
பள்ளியில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் எதுவென்றாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில்தான் ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும். பேருந்தில் வரும் மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க:திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைப்பேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பார்க்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணித்து, படித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க:பள்ளிக்கு மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வரலாமா..??? அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு
ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், பதிவேட்டில் எழுத வேண்டியது கட்டாயம். பள்ளியில் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது. பள்ளிகள் -பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் ஏற்பதுடன், மாணவனின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட 77 வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.