உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பெட்டோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வீட்டில் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.965 விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலர் என்ற அளவில் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
undefined
பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. சென்னையை பொறுத்தவரை பெட்ரோல்,டீசலின் நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று சென்னையில் 4-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வீட்டிற்கு தேவையான அடிப்படையான மளிகை பொருடகளின் முன்பை விட ரூ20 யிலிருந்து ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இதனால ஏழை, எளிய மக்கள், மாத சம்பளம் வாங்குபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக உணவகங்களில் தேநீர் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக,மளிகை மற்றும் எண்ணெய் வகைகளின் விலை உயர்ந்துக்கொண்டே வருகிறது. விலை உயர்வுக்கு காரணமாக உக்ரைன் போரையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வையுமே வியாபாரிகள் முன்வைக்கின்றனர். இதனால் செலவை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.ஹைபிரட் மல்லி கிலோவிற்கு ரூ.120 யிலிருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. நாட்டு மல்லி ரூ.160 யிலிருந்து ரூ.200 ஆகவும் சீரகம் ரூ180 யிலிருந்து ரூ250 ஆகவும் மிளவு ரூ.500 யிலிருந்து ரூ.600 ஆகவும் உளுந்தப்பருப்பு ரூ95 யிலிருந்து 105 ஆகவும் வர மிளகாய் ரூ170 யிலிருந்து ரூ.230 ஆகவும் உயர்ந்துள்ளது. இது போன்று மைதா கிலோவிற்கு ரூ.32 யிலிருந்து ரூ.42 ஆகவும் வெள்ளை ரவை ரூ.36 யிலிருந்து ரூ45 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு, 95 ரூபாயில் இருந்து, 145 ஆக உயர்ந்துள்ளது. சன் பிளவர் ஆயில், 130 ரூபாயில் இருந்து, 190 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, பெரும்பான்மையான மளிகை பொருட்கள் விலை உயர்ந்திருக்கிறது.இந்த விலை உயர்வு குறித்து தமிழக வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் கூறும் போது மளிகை பொருட்கள் விலை ஓராண்டிற்கு ஒரு முறை உயரவும் செய்யும் குறையவும் செய்யும். மேலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மளிகை பொருட்கள் வரத்து அதிகமாக இருக்கும்போது விலை குறையும் என்றார்.மழைக்காலங்களில் இருப்பு குறையும்போதும், பண்டிகை, திருமண வைபவம் மற்றும் விழாக்காலங்களில் மளிகை மற்றும் எண்ணெய் வகைகளுக்கு தேவை ஏற்படும் போதும் விலை உயரும். எதிர்பாராமல் வரும் தொடர் கன மழை, வெள்ளம், சுனாமி போன்ற பேரழிவு காலங்களில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்கள் வந்து சேர்வதில் சிரமம் ஏற்பட்டால், விலை உயருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று கூறினார்.