
கிரானைட் குவாரிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் ஆய்வறிக்கையை வெளியிடவும் கோரி விவசாயிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
மதுரையில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் உள்பட பல இடங்களில் சட்டவிரோதமாக, ஏராளமான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பதுவதாகவும், சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்படுவது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும், ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் போது நல மனு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து உத்தரவிட்டது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் செயல்பட்ட கிரானைட் குவாரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அதிகாரி சகாயத்தின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி கட்டம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அமலாக்கப்பிரிவு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
எனவே, இந்த விசாரணையை வருகிற அக்டோபர் 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கிரானைட் குவாரிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் ஆய்வறிக்கையை வெளியிடவும் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.