மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை… பணி நியமன ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Nov 3, 2021, 11:53 AM IST
Highlights

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி, தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மூத்த மகன் மாரியப்பன். 21. வயதான இவர்  கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதை அடுத்து தற்போது நடந்து முடிந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள்  செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையே டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் தங்கமகன் என தடகள விளையாட்டுப் போட்டிகளில் புகழ்பெற்ற மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடித் தந்திருக்கும் அவரைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன். ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் வென்று, ஒவ்வொரு இளைஞர் உள்ளத்திலும் ஊக்கத்தை விதைக்கும் அவர் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது எனப் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வெள்ளிப்பதக்கச் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் தொடரட்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தனது வெள்ளிப் பதக்கத்தைக் காண்பித்து மாரியப்பன் வாழ்த்து பெற்றார். அப்போது அவர், "டோக்கியோ பாராலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் வென்றதில் சிறிது வருத்தம் உள்ளது. எனக்கு அரசுப் பணி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்று கூறியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் தங்கவேல், எனது கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். 

click me!