
திருவள்ளூர்
திருவள்ளூரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி ஆசிரியர்கள் மாணவிகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால், மாணவிகள் மனவேதனை அடைந்துள்ளனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்? என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ம.பொ.சி.நகரில் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த பத்து கழிவறைகள் உள்ளன. அவற்றை தனியார் சுகாதார பணியாளர்கள் மூலமாக சுத்தம் செய்வதற்கு அரசு ரூ.2500 வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 24–ஆம் தேதி முதல் ஒவ்வொரு வகுப்பிலும் தலைவராகவும், துணைத் தலைவராகவும் உள்ள மாணவிகளை பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியை கட்டாயப்படுத்தியுள்ளாராம்.
இதனையடுத்து மாணவிகள் நாள்தோறும் பள்ளியில் உள்ள கழிவறைகளை அழுதுகொண்டே, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சுத்தம் செய்து வருகின்றனர்.
இது பற்றிய படங்கள் வாட்ஸ்–அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், மாணவிகள் மிகவும் மனவேதனை அடைந்து, பள்ளியில் நடக்கிற அத்துமீறல் பற்றி அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் நேற்று காலை அந்த பள்ளிக்கு சென்று ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் கழிவறைகளை சுத்தம் செய்ய கூறியது யார்? என்பது குறித்து மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் கேட்டபோது, "திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணை அடிப்படையில் தலைமை ஆசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.