
சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.ஓ-வாக (Block Medical Officer) பணியாற்றி வருகிறார் டாக்டர் மார்கண்டன். இவரது கடந்த 7 ஆண்டுகால அட்டூழியங்கள், அந்த பகுதி மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில்: மக்களின் உயிர் காக்க வேண்டிய மருத்துவர், மக்களின் வரிப்பணத்தில் கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டு, பகல் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.ஓ-வாக பணியாற்றி வந்த டாக்டர் மார்கண்டன் மருத்துவ பணிகளை தவிர்த்து அனைத்து கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார்.
அரசு சம்பளத்தில் சொந்த கிளினிக்
அரசு மருத்துவமனையில் முழுநேரம் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் நோயைத் தீர்க்க வேண்டிய மார்கண்டன், இடைக்காட்டூர்- மானாமதுரை என இரண்டு இடங்களில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனையில் பணிக்கு செல்லாமல், அதே நேரத்தில் சொந்த கிளினிக்கை நடத்தி வருகிறார். மாவட்ட அளவில் இருந்த அதிகாரிகளை ஏமாற்றி அதே நேரத்திலேயே அந்த இரு கிளினிக்குகளையும் நடத்தி வருவது குறித்து இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக புகார் அளித்து வருகிறோம். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாத மார்க்கண்டன், லோக்கல் தாதா பாண்டிவேல் உள்ளிட்டவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு உடன் பணியாற்றும் சக ஊழியர்களை மிரட்டுவதோடு, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என சவால்விட்டு வருகிறார். ஏற்கெனவே இருந்த அதிகாரி இவரது அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருந்ததால் மார்க்கண்டனின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. இப்போது புதிதாக வந்துள்ள அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் மார்க்கண்டனின் கிரிமினல் நடவடிக்கைகளை விசாரித்து உண்மையை உணர்ந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அவர்கள் மீதே புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார்.
அதிகாரிகளுக்கு அல்வா..! ஆதாரத்துடன் சிக்கிய முத்தனேந்தல் பி.எம்.ஓ மார்கண்டன்..! இடைக்காட்டூர்- மானாமதுரை என 2 இடங்களில் சொந்தமாக கிளினிக் நடத்தி வரும் இவர், அரசு மருத்துவ பணிக்கு செல்லாமல், அதிகாரிகளை ஏமாற்றி இரு கிளினிக்குகளையும் நடத்தி வருகிறார்.@CMOTamilnadu pic.twitter.com/S11TOxtqBV
— Thiraviaraj RM (@RMTHIRAVIARAJRM) June 20, 2026
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "முத்தனேந்தல் , நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் மார்கண்டனை கடந்த ஆண்டு வட்டார மருத்துவ அலுவலராக, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மீனாட்சி நியமித்திருந்தார். இந்த மார்கண்டன் காலை முதல் மதியம் வரை இடைக்காட்டூர் கிளினிக், மாலை வேளையில் மானாமதுரை கிளினிக். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு பணிக்கு ஒரு 'விசிட்' அடிப்பதோடு சரி. மீதி ஆறு நாட்களும் அரசு மருத்துவமனை பக்கம் இவர் தலை வைத்தே பார்ப்பதில்லை. அரசு வழங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, அந்த நேரத்தை தனது கல்லாவை நிரப்பப் பயன்படுத்தி வந்தார்.
அரசையும், அதிகாரிகளையும் போலி 'ரிப்போர்ட் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். தான் நடமாடும் மருத்துவ குழுவுடன் ஃபீல்டுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை செய்ததாக கடந்த 2 வருடங்களாக மேலிடத்திற்கு தகவல்களை அனுப்பி நம்ப வைக்கிறார். இதற்கு அவருக்குத் துணையாக இருப்பது ஸ்டாஃப் நர்ஸ் அக்கினி வீரன். ஸ்டாப் நர்ஸ் அக்கினி வீரன் தான் நடமாடும் மருத்துவ குழுவிற்கு மருத்துவர் போல் அதிகாரம் செய்து வருகிறார்.
கூட்டுக்களவாணி
மார்கண்டன் செய்ய வேண்டிய களப்பணிகளை அக்கினி மேற்கொள்வதும், அதற்குப் பிரதிபலனாக அக்கினி அந்தப் பகுதியில் ஒரு 'பெரிய டாக்டர்' போலவே பந்தா செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களிடம் அக்கினி காட்டும் அடாவடி கொஞ்சநஞ்சமல்ல. ஒப்பந்த ஊழியர்களான டிரைவர், கிளீனர் உள்ளிட்டோரின் வேலையைப் பறித்துவிடுவேன் என்று மிரட்டி, தங்களது சட்டவிரோதச் செயல்களை மூடி மறைக்க இந்த 'கூட்டுக்களவாணி' கூட்டணி கச்சிதமாகச் செயல்படுகிறது.
அதே போல் மருத்துவ பணிக்காக வரும் அரசு நிதியை வட்டார மருத்துவ அலுவலர் என்கிற வகையில் அவர் மட்டுமே கையாள வேண்டும். அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கடந்த ஆண்டு மட்டும் இவர் ரூ.11 லட்சம் ரூபாயை தனது சொந்த அக்கவுண்டுக்கு மாற்றிக் கொண்டு கையாடல் செய்திருக்கிறார். அதை மாவட்ட நிர்வாகம் ஆதாரத்துடன் தணிக்கை செய்துள்ளது.
லோக்கல் தாதாக்கள் உதவியுடன் திருட்டு
அதேபோல் அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொறுப்பு மருத்துவர்கள் விடுப்பில் சென்று விட்டால், அங்கு சென்று மருத்துவமனைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை லோக்கல் தாதாக்கள் உதவியுடன் திருடி விடுவார். இது குறித்து எங்கள் பகுதி மக்கள் புகார் அளித்து அதன் அடிப்படையில் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியரே அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இத்தனை தவறுகளையும் செய்யும் மார்க்கண்டன், தன் மீதான தவறுகளை மறைக்க, சக மருத்து ஊழியர்களை மிரட்டும் வகையில் செயல்படுகிறார். லோக்கல் தாதாவான பாண்டிவேல் உள்ளிட்டவர்களை அரசு மருத்துவமனைக்குள் அனுப்பி மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். சக மருத்துவர்கள் குறித்து லோக்கல் பத்திரிகைகளில் வேண்டுமென்றே அவதூறு செய்திகளை வரவழைப்பது, பொய்யான புகாரளிப்பது என பல வழிகளில் அட்டூழியம் செய்து வருகின்றனர். இது குறித்து எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட உயரதிகாரிகளிடம் பல மனுக்களை அளித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உண்மைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முற்பட்டால், உயரதிகாரிகள் மீது வழக்கு தொடர்வேன் என மார்கண்டன் மிரட்டல் விடுக்கிறார்'' எனக் கொந்தளிக்கிறார்கள்.
பாலியல் வற்புறுத்தல்
கடமை தவறு, மோசடி செய்வது, மிரட்டல் விடுப்பது ஒருபுறம் என்றால், மார்கண்டனின் மருத்துவ பெண் ஊழியர்களிடம் கீழ்த்தரமான நடத்தைகளும் சந்தி சிரிக்கிறது. இது குறித்து மார்கண்டனால் பாலியல் வற்புறுத்தலுக்கு பலியான அரசு செவிலியர் விசாலாட்சி கூறுகையில், ''மார்கண்டன் மருத்துவர் தொழிலுக்கே லாயஜக்கற்றவர். சக பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், அவர்களைச் சீண்டுவதும் இவரது வாடிக்கை. 2018ம் ஆண்டு எனக்கு பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்தார். மேலதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதனடிப்படையில் இவர் நடவடிக்கைக்கு உள்ளானவர் இந்த மார்க்கண்டன். நடமாடும் மருத்துவரான அவரை மருத்துவமனைக்கு உள்ளேயே வரக்கூடாது என கண்டிப்பு காட்டினார் அப்போது மாவட்ட அதிகாரியாக இருந்த பெண் அலுவலர்.
கிராமப்புறங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரும் ஏழைப் பெண்கள், மானத்திற்கு அஞ்சி மார்கண்டனின் இரட்டை அர்த்த பேச்சுகளையும், சீண்டல்களையும் வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும், இவரை விட மூத்த பெண் ஊழியர்களையும் இவர் ஒருமையில் பேசுவது அதிகாரத்தின் உச்சபட்ச துஷ்பிரயோகம். ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு, சக பெண் ஊழியர்களுக்கே பாதுகாப்பு இவரால் கேடுகெட்டுப் போயுள்ளது. இவரது இத்தனை அயோக்கியத்தனத்தையும் கண்டுகொள்ளாமல் அவருக்கு சப்போர்ட்டாக நடந்து கொண்டு வந்தார் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் மீனாட்சி. அவர் கொடுக்கும் தைரியத்தில்தான் மார்கண்டனின் அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடுகிறது.
வீடியோ வைத்து என்னை என்ன செய்ய முடியும்..?
இப்போது மருத்துவ அதிகாரியான மீனாட்சி நீண்ட விடுப்பில் சென்றுள்ளதால், பொறுப்பு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் மார்கண்டனின் தில்லுமுல்லுகளை விசாரத்து உண்மைகளை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அவர்கள் மீதே வழக்கு தொடுப்பதாக மிரட்டுகிறார்'' என மார்கண்டன் மீது ஏகபோக குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
பொதுமக்கள் சொன்ன புகாரை உறுதிப்படுத்த, ஊடகத்துறையினர், சில அச்சு ஊடகத்தினர் வாரக்கணக்கில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், பணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மார்க்கண்டன் அதே நேரத்தில் சொந்த கிளினிக்கை கவனித்துக் கொண்டிருந்தபோது ஜிபிஎஸ் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் பதிவாகி ஆதாரமாக சிக்கியுள்ளது. வீடியோ ஆதாரங்களை வைத்து மார்கண்டனிடம் விளக்கம் கேட்டபோது, ''வீடியோவை வைத்து என்னை என்ன செய்ய முடியும்..? உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என சவால் விடுகிறார்.
மீனாட்சி மருத்துவர் மார்கண்டனுக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட்
மாவட்ட மருத்துவ அலுவலர் மீனாட்சி, மருத்துவர் மார்கண்டனுக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட் செய்ய வேண்டும் என விசாரித்தபோது, '' ஈஷா யோகா மையத்தில் இருந்து ஆட்களை வரவைத்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும் அவரது ஈஷா யோகா மையத்தை பற்றியும் Power point presentation போட்டு மீனாட்சி ஏற்பாட்டின் பேரில் வகுப்பு எடுத்து வருகிறார்கள். அனைவருக்கும் ருத்ராட்சம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு , விருப்பம் இல்லாமல் மாவட்ட அதிகாரியின் கட்டாயத்தால் அலுவலக பணியாளர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவரும் ருத்ராட்சம் பெற்று சென்றுள்ளார்கள். நிகழ்வில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் போட்டோவை வைத்து, அவருக்கு பூஜை செய்து அனைவரும் அவரை வணங்கிட அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர் மீனாட்சி.
அதன் பிறகு அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் பிரபல யோகா ஆப் ஒன்றை அனைவரும் பதிவிறக்கம் செய்து தினமும் அதற்கு ரிவியூபோட வேண்டும் என்றும், அதில் கூறும் அறிவுரைகள் அனைத்தையும் தினமும் ஒரு மணி நேரம் கேட்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதை கேட்காத, விருப்பம் இல்லாத பணியாளர்களை சம்மந்தம் இல்லாமல் திட்டுவதும், ரிப்போர்ட் பேப்பர்களை தூக்கி அவர்கள் முகத்தில் எறிந்தும் துன்புறுத்தி உள்ளார். இதற்கு மீனாட்சிக்கு உறுதுணையாக இருப்பதே மார்கண்டன்தான். ஆகையால், மார்கண்டன் பற்றி எந்த வகையிலான புகார்கள் சென்றாலும் அதனை மருத்துவ அதிகாரி உதாசீனப்படுத்தி விடுவார். இதனால் வேலை செய்யும் பணியாளர்கள் மிகவும் மன அழுத்தத்தை அனுபவித்து வருகிறார்கள்.
மருத்துவர் மீனாட்சி தினமும் அலுவலக நேரத்தில் காலை மாலை ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்வதாக அமர்ந்து கொண்டு, அலுவலக கோப்புகளில் கையொப்பம் வாங்க பணியாளர்கள் அனைவரையும் பல மணி நேரங்கள் காத்திருக்க வைத்துள்ளார் என சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவ ஊழியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
விதிகளுக்குப் புறம்பானது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973, மற்றும் மத்திய அரசு ஊழியர் விதிகளின்படி அரசு ஊழியர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பணியின் போது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்படக் கூடாது. அரசு அலுவலக வளாகத்தை மதப் பிரசாரங்களுக்கோ, ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கோ அல்லது பிற ஆன்மீகச் சேவைகளுக்கோ பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானது என்கிறது. இதற்கு மருத்துவ அதிகாரி மீனாட்சியும், மார்கண்டனும் மட்டும் விதிவிலக்கா..?