
நீலகிரி
நிலகிரியில் உள்ள கூடலூர் சாலையில் தாழ்வாக சென்ற மின்கம்பி கேரள அரசு பேருந்தின்மீது உரசியது. இதனால் பேருந்து நகர முடியாமல் நின்றது. நல்லவேளையாக காலை முதலே மின்சாரம் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து இரண்டாம் மைல், தேவர்சோலை வழியாக சுல்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள், பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், கூடலூர் 2–ஆம் மைல் பகுதியில் சாலையோரம் தாழ்வாக மின்கம்பிகள் சென்றது. நேற்று முன்தினம் பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு கேரள அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
கூடலூர் 2–ஆம் மைல் பகுதியில் கேரள அரசு பேருந்து வந்தது. அப்போது எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாலையோரம் பேருந்தை ஓட்டினார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி மீது பேருந்து உரசியது. மேலும், மின்கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
ஆனால், நல்லவேளையாக கூடலூர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் மின்கம்பி உரசியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மின்கம்பியை அறுந்த விஷயத்தில் கேரள பேருந்து ஓட்டுநருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் கேரள அரசு பேருந்து புறப்பட்டு சென்றது.