மீண்டும் தலைத் தூக்குகிறதா பெண் சிசு கொலை…

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
மீண்டும் தலைத் தூக்குகிறதா பெண் சிசு கொலை…

சுருக்கம்

கரூர் மாவட்டத்தில், ஸ்கேன் மையங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழிக்கின்றனர் என்று வந்த புகாரின் அடிப்படையில் ஸ்கேன் மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கரூரில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் அறிவதும், அறிவிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த நிலையில் கரூரில் உள்ள ஒரு சில மையங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என முன்கூட்டியே கண்டறிந்து கூறப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் அதை கருவிலே அழித்துவிடுவதாகவும் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு பல புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராமராஜ் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை கரூர் நகரில் உள்ள பல்வேறு பரிசோதனை (ஸ்கேன்) மையங்களில் சோதனை நடத்தினர்.

கரூர் காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மது ஸ்கேன் மையத்திலும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், நேற்று மாலை 5 மணி அளவில் மது ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராமராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

சீல்வைக்கப்பட்ட ஸ்கேன் மையத்தில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கவில்லை. அதோடு ஸ்கேன் எடுக்கப்பட்ட உருவங்கள் (பிம்பங்கள்) அழித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இதைத் தொடர்நது சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையத்திற்கு சில் வைக்கப்பட்டது. மேலும் 2 ஸ்கேன் மையங்களில் சோதனை நடந்துள்ளது. அவைகளின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.

மேலும், “கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு (2016) கணக்கெடுப்பின் படி கரூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதாவது 1000 ஆண் குழந்தைகள் என்றால், 882 பெண் குழந்தைகள் தான் பிறந்து உள்ளன.

எனவே பெண் குழந்தை பிறப்பு குறைந்ததால் சோதனை செய்ய வந்தோம். இது வழக்கமான சோதனை தான். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்கேன் மையங்களிலும் சோதனை செய்யப்படும். இதில் ஏதாவது தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையில் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர அலுவலக போலீஸ் துணை சூப்பிரண்டு நரசிம்மவர்மன், கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் மற்றும் கரூர் மாவட்ட மருத்துவ பணிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை? தமிழக அரசு விளக்கம்!