கோவை கமலாத்தாள் பாட்டியைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராணிக்கு இலவச சிலிண்டர் அடுப்பு: எச்பி நிறுவனம் வழங்கி அசத்தல்

By Selvanayagam PFirst Published Sep 18, 2019, 11:22 PM IST
Highlights

கோவை வடிவேலம்பாளையத்தில் ஒருரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியின் வறுமையைப் பார்த்த பாரத் கேஸ் நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர்,அடுப்பு கொடுத்து உதவியது.

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடல் பகுதியில் இதேபோன்று 70 வயதான ராணி என்ற பாட்டி இட்லி விற்பனை செய்து வந்தார். அவரின் சூழல் குறித்தும் செய்திவெளியானதைப் பார்த்து இந்துஸ்தான்பெட்ரோலியம் நிறுவனம் சமையல் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கி நெகிழச் செய்துள்ளது.

கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதானவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் பிரபலம்.

25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கு எழும் கமலாத்தாள் பாட்டி தனது கூன்விழுந்த கழுத்துடன் தள்ளாத வயதிலும் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு இட்லி, சாம்பார், சட்னி வைக்கும் பணியையும் தொடங்குகிறார். நாள் ஒன்றுக்கு கமலாத்தாள் பாட்டி குறைந்தபட்சம் 600 இட்லிகள் வரை விற்பனை செய்து தனது காலத்தை ஓட்டி வருகிறார்.

கமலாத்தாள் பாட்டி குறி்த்து ஊடகங்களில் செய்தி ெவளியாகி இருந்தது. இதைப் பார்த்த மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா பாராட்டு தெரிவித்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கமலாத்தாள் பாட்டி குறித்து ட்விட்டரில் கூறினார். மத்திய அமைச்சரின் உத்தரவின்படி, கோவை கமலாத்தாள் பாட்டிக்கு பாரத் கேஸ் நிறுவனம் கடந்த வாரம் கேஸ் சிலிண்டர், அடுப்பு வழங்கியது.

இதேபோல ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல் அருகே 70 வயதான ராணி எனும் வயதான பாட்டி இட்லி விற்பனை செய்து வருகிறார். வறுமையில் பசியோடு வருபவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு குறைந்த விலையிலும் இட்லி விற்பனை செய்து வருகிறார். 

ராணி பாட்டி குறித்து ஊடங்களில் செய்தி வெளியானது. இதைப்பார்த்த இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ராணி பாட்டிக்கு இலவசமாக கேஸ் சிலிண்டரும், அடுப்பும் இன்று வழங்கினார்கள். தனக்கு இலவசமாக கேஸ் அடுப்பு கிடைக்கச் செய்த அனைவருக்கும் ராணி பாட்டி நன்றிதெரிவித்தார் 

click me!