
பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றின் வளாகத்தினுள் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது வழக்கறுத்தீஸ்வரர் கோயில். இந்த கோயிலுக்கு சென்று யாகம் செய்தாலோ அல்லது எள் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டாலோ வழக்குகளில் இருந்து விடுபட முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த கோயிலுக்கு தமிழக அரசியல்வாதிகள், சினிமா பிரமுகர்கள், வட இந்தியாவைச் சேர்ந்தவர்களும் வந்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இந்த கோயில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயில் வளாகத்தில், கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவது குறித்து, காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அவர் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து கோயிலில் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினார்.
அப்போது கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளக்கரையில், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் கடத்தில் கஞசா செடி வளர்க்கப்பட்டு வருவது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, கோயிலை ஒட்டியுள்ள துணிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை பாத்து வரும் மூர்த்தி என்பவர்தான், கஞ்சா செடிகளை வளர்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். கோயில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்த்தது குறித்து மூர்த்தி, வேறு எங்கேயாவது கஞ்சா செடி வளர்த்தால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து கோயிலுக்குள் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.