
தான் லஞ்சம் பெற்றது உண்மை தான் என விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தராக இருந்த கணபதி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். மன நெருக்கடி காரணமாகவே அறிக்கையில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய கணபதி, அங்கு வேதியியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு காவல் துறையினரால் கையும், களவுமாக பிடிபட்டார்.
கணபதியுடன், வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். தனது தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காகத் துணைவேந்தர் ரூ.30 லட்சம் கேட்பதாக டி.சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருந்தார்.
துணைவேந்தர் கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், தான் லஞ்சம் பெற்றது உண்மை தான் என விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தராக இருந்த கணபதி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். மன நெருக்கடி காரணமாகவே அறிக்கையில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.
மார்ச் 2ம் தேதி வரை துணைவேந்தர் கணபதியை நீதிமன்ற காவலில் வைக்க கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.