கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரில் மத்தியக்குழு இன்று ஆய்வு நடத்தியது. அப்போது மத்தியக் குழுவினரிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரில் மத்தியக்குழு இன்று ஆய்வு நடத்தியது. அப்போது மத்தியக் குழுவினரிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர்.
கஜா புயல் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்திருக்கும் மத்திய குழு புதுக்கோட்டையில் நேற்று முதற்கட்ட ஆய்வை தொடங்கியது. அங்கு எட்டு இடங்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பருத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களின் சேதம் குறித்தும், விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் மத்தியக்குழு ஆய்வு செய்தது.
பின்னர் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சேதமடைந்த வீடுகளை மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது விவசாயிகள் கதறி அழுதுக்கொண்டு மன குமுறல்களை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தினர். மேலும் தென்னை விவசாயிகள் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர். விவசாயிகள் காலில் விழுந்து அழுவதை கண்ட அதிகாரிகள் திகைத்தனர்.
தென்னை மரங்களின் சேதம் குறித்து அதிகாரிகளிடமும், அப்பகுதி மக்களிடமும் ஆய்வுக்குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் புயல் பாதித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன் பின்னர் பட்டுக்கோட்டை தாலுகா புதுக்கோட்டை உள்ளூர் என்ற கிராமத்தில் புயல் பாதித்த இடங்களை மத்தியக்குழு ஆய்வு செய்தது. அப்போது தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் கண்ணீர் மல்க மத்தியக்குழு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.. அதனைத் தொடர்ந்து மல்லிப்பட்டிணத்தில் படகு சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
பின்னர் மத்தியக் குழு அதிகாரி டேனியல் ரிச்சர்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம் என தகவல் தெரிவித்துள்ளனர்.