புயல் கரையை கடந்தாலும் கடல் சீற்றம் குறையவில்லை : மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்

First Published Dec 2, 2016, 2:11 PM IST
Highlights


நடா புயல் கரையை கடந்து விட்டாலும் கடல் சீற்றம் குறையாததால் 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றத்தால் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லப்புரம், கல்பாக்கம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. காரைக்கால் அருகே புயல் கரையை கடந்த போதிலும் கடல் சீற்றம் குறையவில்லை.

இதனால் புதுப்பட்டினம், சட்ராஸ் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக இன்று கடலுக்கு செல்லாமல் உள்ளனர். அவர்களது படகுகள் கரைகளில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, சின்னமுட்டம், சுற்றுவட்டார மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றத்தால் குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நினைவகங்களை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கரையை கடந்த நடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதே கடல் சீற்றத்துக்கு காரணமாகும். பல அடி உயரத்திற்கு மேலாக கடல் அலைகள் ஆர்ப்பரிப்பதால் படகுகளை கரையோரத்தில் நிறுத்தியுள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

click me!