ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. உண்டா..? இல்லையா..? வெளியான தகவல்..

By Thanalakshmi VFirst Published Jan 20, 2022, 7:05 PM IST
Highlights

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பொறுத்து இந்த வார ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

இருநாட்களாக சற்று குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு பொங்கல் பண்டிகைக்கு பின் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று மட்டும் 26,981 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு 8007ஆக உயர்ந்துள்ள நிலையில், செங்கல்பட்டில் 2194 பேருக்கும், கோவையில் 3082 பேருக்கும், கன்னியாகுமரி 1008 பேருக்கும் என பல்வேறு மாவட்டங்களிலும் தினசரி பாதிப்புகள் மோசமடைய தொடங்கியுள்ளது. அதேபோல தினசரி கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 30ஐ நெருங்கி வருகிறது. இதே நிலைமை தொடர்ந்தால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது. கடற்கரை செல்ல தடை, பூங்காக்கள் இயங்க அனுமதி மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், மார்க்கேட், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% பேர் மட்டும் செல்ல அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. அதே போல் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.

குறிப்பாக ஜன.9 மற்றும் ஜன.16 எனக் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை அரசு அறிவித்திருந்தது. அந்த நாட்களில் அத்தியாவசிய பணிகளைச் செய்யவும் திருமணத்திற்குச் செல்லவும் மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. பொது போக்குவரத்திற்கு அரசு முற்றிலும் தடை விதித்திருந்தது. இதன் காரணமாக இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இருப்பினும், இந்த வாரம் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவு பதிவாகும் மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. அங்கேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாலும் மருத்துவ உள்கட்டமைப்பு தயாராக இருப்பதாலும் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகம் பாதிக்கப்படும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு வாரக் காலம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால்  கொரோனா பாதிப்பு சரியாகிவிடுகிறது சூழல் நிலவுவதால் ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்கப் பல மாநிலங்களும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஏனென்றால் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தும் போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்.

தமிழ்நாட்டிலும் கூட கடந்த வாரம் ஞாயிறு ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியானது. அதுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் என்பதால் மக்கள் அதிகம் வெளியே செல்வார்கள் என்பதால் அதைக் கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதே கூட வரும் வாரங்களில் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று சுகாதார வல்லுநர்கள் முதல்வர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியானது.

எனவே, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றே தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இன்றும் நாளையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் மிகப் பெரிய அளவில் உயர்ந்தால் மட்டுமே கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

click me!