
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் வகுப்ப்பறை முதல் சமையலறை வரை ஆட்சியர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட செல்லப்பம்பட்டி, காரைக்குறிச்சிபுதூர், பாச்சல் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து, அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்வது எப்படி என அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“ஒவ்வொரு மாணவ, மாணவியும் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி நன்றாக படித்திட வேண்டும். பாடங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை திரும்ப, திரும்ப எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனதில் அப்பாடங்கள் நன்றாக பதியும். படிக்கும்போது பாடத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமானால் உடனடியாக ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு, பாடங்களை படித்திட வேண்டும்.
ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிப்பதற்கு உறுதுணையாகவும், ஊன்று கோலாகவும் விளங்கிட வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியர் மீதும் தனிகவனம் கொண்டு, அவர்கள் நன்றாக படிப்பதற்கு உதவிட வேண்டும்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்வதோடு, அனைத்து மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும்” என்று ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கின்றனவா? என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் அப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சென்ற ஆட்சியர் அங்கு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சாதம், வேக வைத்த முட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் குழந்தைகளுக்கு தரமான உணவுகளை சமைத்து வழங்கிட வேண்டுமென சமையலர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கோபிதாஸ் உள்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உடன் இருந்தனர்.