
திண்டுக்கல்
டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்கு கிராம மக்கள் திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பாடியில், டாஸ்மாக் சாராயக் கடை செயல்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி இந்த சாராயக் கடை மூடப்பட்டது.
இதையடுத்து அந்த சாராயக் கடையை ராஜக்காபட்டி ஊராட்சி குமாரபாளையம் லட்சுமிநாயக்கன்பட்டி பிரிவில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க லட்சுமி நாயக்கன்பட்டி, பூசாரிபட்டி, கல்லுப்பட்டி, குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்கக் கூடாது என்றுகூறி லட்சுமிநாயக்கன்பட்டி பிரிவில் நான்கு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் காவல் ஆய்வாளர் ராம்நாராயணன் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"இந்த வழியாகதான் நான்கு கிராம மக்களும் சென்று வர வேண்டும். இங்கு சாராயக் கடை அமைத்தால் தேவையின்றி வீண் பிரச்சனை வரும்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இங்கு சாராயக் கடை அமைக்கக் கூடாது" என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக காவலாளர்கள் உறுதி அளித்ததை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.