Aadhav Arjuna joins TVK: விசிகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார். விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். திமுக அரசை விமர்சித்ததால் விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ், விஜய்யுடன் சமீபத்தில் மேடையையும் பகிர்ந்து கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை காலையில் த.வெ.க. தலைவர் விஜய்யை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார் எனவும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வைத்து சந்திப்பு நடைபெற்றது எனவும் கூறப்படுகிறது.
விசிகவில் இருந்த துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து, ஆளும் திமுக அரசு குறித்து தொடர்ந்து விமர்சங்களை முன்வைத்து வந்தார். இதன் எதிரொலியாக, அவர் 6 மாத காலத்துக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் விஜய்யின் த.வெ.க.வில் இணைந்து செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் த.வெ.க. தலைவர் விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவும் ஒரே மேடையில் தோன்றினர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்க மறுத்த அந்த விழாவை ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.