
Former ISRO scientist Nellai Muthu passes away : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் 2025 ஜூன் 16 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். இவரது தந்தை எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் எம். சொர்ணத்தம்மாள். அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியவர். ISRO-வின் ஆரம்பகால ராக்கெட் திட்டங்களில் முக்கிய பங்காற்றினார். செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளில் தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபட்டார்.
ISRO-வின் ஆய்வகங்களில் இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். அவரது ஆய்வுகள், குறிப்பாக விண்வெளி தொழில்நுட்பத்தில், இந்தியாவின் விண்வெளி திட்டங்களை மேம்படுத்த உதவின. செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளில் ஆர்வம் காட்டி, அதன் நிலப்பரப்பு மற்றும் வளிமண்டலம் குறித்த ஆய்வுகளுக்கு தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கினார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியவர். “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என அப்துல் கலாம் பாராட்டியுள்ளார்.
நெல்லை முத்து விண்வெளி மற்றும் அறிவியல் துறைகளை தமிழ் மக்களுக்கு எளிமையாக விளக்குவதற்காக பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு (2004) ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் (2005) இந்த புத்தகங்கள் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருது பெற்றுள்ளது. அறிவியல் ஆத்திசூடி, விண்வெளி 2057 மற்றும் அறிவியல் வரலாறு போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
மேலும் நெல்லை முத்துதமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது 4 புத்தகங்களுக்கு வழங்கப்பட்டது. நெல்லை சு. முத்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாக பங்களித்ததுடன், அறிவியல் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர். அவரது புத்தகங்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டின. அவரது மறைவு அறிவியல் மற்றும் தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பாகும்.