
குன்னத்தூர் அருகே மர்மான முறையில் 4 மயிலகள் இறந்துகிடப்பது பற்றி தகவல் தெரிவித்தும் வனத்துறை அதிகாரிகள் வராமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
குன்னத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலங்களில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழைப்பருவம் ஆரம்பித்தும், மழை நிலத்தை நனைக்காததால் கார் மேகத்தை கண்டு மயிலால் ஆட முடியாமல் போனது.
தற்போது மழை இல்லாத காரணத்தினால் மயில்கள், விவசாய நிலங்களில் புகுந்து மக்காச்சோளம், நிலக்கடலை, தக்காளி, மிளகாய் ஆகிய பயிர்களை உண்டு வருகிறது. விதைத்த சோளங்களையும் மயில்கள் விட்டு வைப்பதில்லை. மயில்கள் பசிக்குத் தின்று விட்டாலும், விதைத்தவன் பாடும், விவசாயின் பாடும் மோசமான நிலையில் இருக்கிறது என்று பாவம் மயிலுக்குத் தெரியாது அல்லவா? அதான் மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து தின்று விடுகின்றன.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை குன்னத்தூர் அருகே செங்காளிபாளையம் பகவதி அம்மன் கோவில் அருகே 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை சம்பவ இடத்திற்கு வரவும் இல்லை. மயில்களைப் பார்வையிடவும் இல்லை. இது வனத்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கை காட்டுகிறது.
இறந்த மயில்களை மருத்துவ பரிசோதனை செய்தால்தான் அவை எப்படி இறந்தன? என தெரியவரும். அப்போதுதான், இதுபோல மயில்கள் சாவதை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் வருத்தத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.