பெருங்களத்தூர் அருகே தென்பட்ட முதலையால் பாதிப்பு இல்லை என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் சூறைக்காற்றுடன் இரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மழை பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை புயல் மேலும் தீவிரமடைந்து தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் தேர்தல் முடிவுகள்: மிசோ தேசிய முன்னணி முன்னிலை!
இதனிடையே, சென்னை அருகே பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், “பெருங்களத்தூர் அருகே தென்பட்ட முதலையால் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். அதனால், மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்றார்.
“சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளன. புயல், மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.” என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.