டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை.. பிடிக்க போராடும் வனத்துறை.. புதிய சிசிடிவி வெளியீடு..

By Thanalakshmi VFirst Published Jan 19, 2022, 4:33 PM IST
Highlights

கோவை மாவட்டத்தில் பழைய குடோன் ஒன்றில் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் குடோனில் சர்வ சாதாரணமாக சிறுத்தை உலாவி வரும் புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பழைய குடோன் ஒன்றில் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் குடோனில் சர்வ சாதாரணமாக சிறுத்தை உலாவி வரும் புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பி.கே.புதூர் பகுதியில் உள்ள பழைய குடோன் ஒன்றில், கடந்த 17 ம் தேதி சிறுத்தை ஒன்று பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

குடோன் நுழைவு வாயிலில் இரண்டு கூண்டுகள் அமைத்து அதற்குள் மாமிசம் வைத்து சிறுத்தையை கூண்டிற்குள் வரவழைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் முதல் நாள் முயற்சி வெற்றி பெறாத நிலையில், நேற்றும் சிறுத்தையை பிடிப்பதற்கான பணி தொடர்ந்தது. நேற்று காலை முதலே பல்வேறு முயற்சிகளை வனத் துறையினர் மேற்கொண்ட நிலையிலும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டியது. இதனால், மின் விளக்குகள் அமைத்து இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

குடோனில் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க, ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டது. ட்ரோன் கேமரா பழைய கழிவுப் பொருட்களில் சிக்கிக் கொண்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் 10 அடி உயர கம்பத்தில், சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று மூன்றாவது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சிசிடிவி கேமராக்களில் இன்று அதிகாலை சிறுத்தையின் நடவடிக்கைகள் பதிவானது. அந்த காட்சிகளை வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் எவ்வித பயமுமின்றி சிறுத்தை சர்வ சாதாரணமாக குடோனுக்குள் உலாவும் காட்சிகள் பதிவாகியுள்ளது. குடோன் பாழடைந்த நிலையில் உள்ளதால் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளது எனவும், அதனால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள வனத்துறையினர், சிறுத்தை விரைவில் கூண்டில் சிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

click me!