ஒன்றரை ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் குடிநீர் குழாய் உடைப்பு…

First Published Dec 17, 2016, 10:57 AM IST
Highlights


ஒட்டிமொரா ஒசட்டி கிராமத்தில், பலமுறை புகார் அளித்தும், குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஒன்றரை ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதனை சீரமைத்து கொடுக்காமறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.

மஞ்சூர் அருகே ஒட்டிமொரா ஒசட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 120-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆடாசோலை வனப்பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவந்து, ஒட்டிமொரா ஒசட்டியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருப்பு வைத்து, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்லும் குடிநீர்க் குழாயில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

இதுகுறித்து கிராம மக்கள் இத்தலார் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. 

உடைந்த குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர் கலந்ததால் கிராம மக்களுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

அதைத் தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் சுமார் 60 மீட்டர் தூரத்துக்கு பி.வி.சி. குழாய்கள் பொருத்தி தாற்காலிகமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் கூறியதாவது: “இத்தலார் ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டிமொரா ஒசட்டி கிராமத்திலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. குடிநீர்க் குழாய்களும் உடைந்துள்ளன.

இதுதொடர்பாக ஊராட்சியில் புகார் தெரிவித்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

click me!