
காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.40 லட்சத்தை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக, சுயேட்சை என பலர் போட்டியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி தேர்தல் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் மதுரை புறவழி சாலையில் இன்று தீவிர வாகன சோனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, ஒரு சூட்கேசில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் ரூ.40 லட்சம் இருந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, காரில் வந்தவர் நாராயணசாமி என தெரிந்தது. ஆனால், அவரிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பணத்துக்கான ஆவணங்கள் காண்பித்துவிட்டு, அவற்றை பெற்று செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
இதைதொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் பரபரப்பு அடைந்துள்ளனர். இதேபோன்று அனைத்து தொகுதியிலும் பணம் கொண்டு செல்லப்படும் என சந்தேகிக்கின்றனர். இதனால், அனைத்து பகுதியிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மேற்கண்ட தொகுதிகளில் வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடு பறந்தாலும், தேர்தல் அதிகாரிகளின் வேட்டை அனல் பறக்கிறது.