
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்று அச்சம் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு கடந்த நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பள்ளி துவங்குவதாக இருந்தது. ஆனால், இன்று காலை 6 மணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, விடுமுறை தொடர்பாக பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம் என்றும் தேவைப்பட்டால் விடுமுறை விடலாம் என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.
கனமழையால், சென்னையில் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வெள்ளம் ஏற்படலாம் என அஞ்ச வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிள்ளார். பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுக்குறித்து பதிவிட்டுள்ளார். மேலும், சென்னையில் அடுத்தடுத்து மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளர்.
நவம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நல்ல மழை பெய்யும் என கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தேன். தற்போது மழை பெய்து வருகிறது. ஆனாலும், சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் வேண்டாம் எனவும் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது இடைவெளி விட்டே மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். டெல்டா பகுதி மற்றும் திருவாரூர், நாகை, மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.