
திருவள்ளூர்
திருவள்ளூரில் உள்ள பேரூராட்சிப் பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று பேரூராட்சி உதவி இயக்குநரைக் கண்டித்து மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் ஏரி சுமார் 835 எக்டேர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியில் மணல் மேவியும், முட்புதர்களுடன் கடந்த 70 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. மேலும், இவற்றின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஏரியில் உள்ள முட்புதர்களை அகற்றி ஆழப்படுத்துவதன் மூலம் மழைக் காலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுக்கலாம். அத்துடன், இப்பகுதியின் குடிநீர் ஆதாரத்தையும் பெருக்கலாம்.
இதனை வலியுறுத்தி மக்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஏரியில் எந்தவித மராமத்து பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் பரவலாக பெய்துவரும் மழையால் திருநின்றவூர் பேரூராட்சியில் உள்ள 10, 11, 12, 13-ஆகிய நான்கு வார்டுகளில் மழை நீர் வெள்ளம்போல புகுந்தது. இதனால், இப்பகுதி பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்தப் பகுதிகளைப் பார்வையிட வந்த அனைத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்குமார், செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர்.
மக்களுக்கு ஆதரவாக முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் எபினேசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி.அறிவழகன் ஆகியோரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பின்னர், அங்கு வந்த காவலாளர்கள் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, “குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை பொக்லைன் இயந்திரம் கொண்டு வெளியேற்றவும், ஏரியை தூர்வாரவும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.