
சேலம்
சேலத்தில் பெய்துவரும் தொடர் கன மழையால் சரபங்கா நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் நேற்று கன மழை பெய்தது. அதே நேரத்தில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்திலும் விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.
ஓமலூர் பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் ஏற்காடு மலையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னமே பெய்த கன மழையினால் டேனிஸ்பேட்டை உள்கோம்பை மலையில் இருந்து வரும் மேற்கு சரபங்கா நதியின் வெள்ளத்தால் டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பியுள்ளது. நிரம்பிய நீர் கோட்டேரிக்கு உபரிநீர் சென்று வருவதால் கோட்டேரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும், சர்க்கரை செட்டிபட்டி ஊராட்சி குருமச்சி கரடு பகுதியில் இருந்து வரும் கிழக்கு சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பி காமலாபுரம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் காமலாபுரம் பெரிய ஏரி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று பெய்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.