
எஞ்சின் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் மும்பை செல்லவிருந்த பயணிகள் கோவை விமான நிலைத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் இருந்து மும்பைக்கு தினமும் மாலை தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை மும்பை செல்வதற்காக ஏராளமான பயணிகள் முன் பதிவு செய்திருந்தனர்.
முன் பதிவு செய்த பயணிகள் அனைவரும் விதிகளுக்கு உட்பட்டு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது மாலை புறப்படுவதாக இருந்த விமானம் திடீரென ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை கேட்ட பயணிகள் சம்மந்தப்பட்ட தனியார் விமான அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது எஞ்சின் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மும்பைக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யும் படி விமானநிலையத்திற்குள் போராட்டம் நடத்தினர். இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.