Fishing Ban period ended: நள்ளிரவுடன் நிறைவடைகிறது மீன்பிடி தடை காலம்... கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்!!

By Narendran SFirst Published Jun 14, 2022, 10:41 PM IST
Highlights

தமிழக கடலில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுவதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

தமிழக கடலில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுவதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காகவும், இறால் மீன் வளர்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கி 60 நாட்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடை அமலுக்கு வந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள வங்கக்கடல், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடந்த 2 மாதமாக 7,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதேபோல் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது தொழிலை இழந்தனர்.

மீன்பிடி தடை காலத்தால் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், கோடிக்கணக்கில் அன்னிய செலாவணி இழப்பும் ஏற்பட்டது. மீன்பிடி தடைகாலத்தால் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடந்த 2 மாதமாக தங்களது விசைப்படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 2 மாத கால மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 (இன்று) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை அதிகாலை  முதல் பாக் ஜலசந்தி, வங்கக்கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லவுள்ளனர். 16 ஆம் தேதி முதல் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன் பிடிக்க செல்வர்.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யத்தில் 1,500 விசைப்படகுகள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 2,500 விசைப்படகுகள், 20,000 மீனவர்கள், தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கல்லிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினத்தில் 152 விசைப்படகுகள், 1,000 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடியக்கரை, ஜெகதாப்பட்டினத்தில் 443 விசைப்படகு, 2,000 மீனவர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2 மாதமாக தங்களது விசைப்படகுகளை சீரமைத்ததுடன் வலைகளை சரி செய்து கடலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். மேலும் மீன் பிடிக்க தேவையான வலைகள், ஐஸ்கட்டி மற்றும் உபகரணங்களை தங்களது விசைப்படகுகளில் ஏற்றி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை அதிகாலை மீன்வளத்துறை அதிகாரிகளால் விசைப்படகுகளுக்கு மீன்பிடி டோக்கன் வழங்கப்படும். இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் 4,595 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வர்.

click me!