ஆன்லைன்ல ஆர்டர் செய்தால் அரை மணி நேரத்தில் காலிங்பெல் அடிக்கும் – மீன் வாங்க புதிய திட்டம்...

First Published May 25, 2017, 12:18 PM IST
Highlights
Fishery dept announce online fish sales

சென்னையில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இணையதளம் மற்றும் தொலைபேசி வழியாக மீன் உணவு பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி சென்னை பட்டினபாக்கத்தில் நடைபெற்றது.

இந்த ஆன்லைன் மீன் விற்பனையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :

மீன் உணவு வகைகள் உண்பதால் இதயநோய் வராமல் தடுக்கிறது. ஆரோக்கியமான உணவான மீன் உணவுப்பொருள்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது.

மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.

www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்யலாம்.

இந்த ஆன்லைன் திட்டம் 10 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 5 மையங்கள் உள்ளன. சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் தரலாம். 

இதற்கு போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும்.

இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!