
இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த பல கோடி மதிப்புள்ள 115 படகுகள், சிறையிலுள்ள 5 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 6வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால் படகுகள் அனைத்தும் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வருவாய் இழந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5வது நாளாக நீடித்தபோதும், மாநில அரசு தரப்பில் உயரதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்து சென்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனை, படகுகள் விடுவிப்பு, இருநாட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய அரசிடம் இருந்தும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் படகுகள் அனைத்தும் சேதமடையும் வாய்ப்புள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் புயல் மழைக்காலம் என்பதால் கடல்பகுதியில் சீற்றம் அதிகமாகி, கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் முற்றிலும் சேதமடைந்து கடலில் மூழ்கும் வாய்ப்புள்ளன.
எனவே, படகுகளை விடுவிப்பதற்கும், சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்யவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 6வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.