
கன்னியாகுமரி பகுதியில் கடந்த வாரம் வீசிய ஓக்ஹி புயலில் காணாமல் போன மீன்வர்களைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்று இரு தினங்களாக அப்பகுதி சர்ச்சுகளின் பாதிரியார்கள் தலைமையில் மீனவர்கள் போராடி வருகின்றனர்.
நேற்று முன் தினம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், தங்களுக்கு கேரள அரசு அறிவிப்பது போல் ரூ.20 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்து மீனவர்கள் கலைந்து சென்றனர். ஆனால், சர்ச் பாதிரியார்கள் சிலர் மேலும் போராட்டத்தை நேற்று தொடர்ந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியில் மீனவர்கள் இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாயமான 1213 மீனவர்கள் மீட்கப்படும் வரையிலும், முதல்வர் நேரில் வந்து மீனவர்களுக்கு ஆறுதல் கூறும் வரையிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்திலும், நேற்று குளச்சல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று சின்னத்துறையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.