
ராமேஸ்வரத்தை அருகே சின்னப்பாலம் கிராமத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காகக் கட்டப்பட்ட தடுப்பு சுவர் தரமில்லாமல் உள்ளதாக மீனவ மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ளது சின்னப்பாலம் கிராமம். இந்த கிராமத்தில் அடிக்கடி நிகழும் கடல் அரிப்பாலும், கடல் நீர் ஊருக்குள் புகுவதாலும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் கிராம மக்கள்.
இதனைத் தடுக்க தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான தொகுதி நிதியில் இருந்து 43 லட்ச ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர் 100 மீட்டர் நீளமும் 3 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் தரம் இல்லாது இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சுவர் ஒரு மாத காலத்துக்குக்கூட தாங்கும் நிலையில் இல்லை எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். சிறுவர்கள், அந்த சுவரில் ஏறி விளையாடும்போதே உடைந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.