
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்பு. இவர் சென்னையில் பணியாற்றி வந்த போது தன்னுடன் பணியாற்றி வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பிரதீபா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பாலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நுங்கு வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், அபிமன்பு மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டது பிடிக்காமல் அபிமன்யுவின் தந்தை முனியன் மற்றும், முனியனின் மூன்றாவது மனைவியான கவிதா ஆகியோர் அடிக்கடி பிரதீபாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டது வந்தது மட்டுமல்லாமல் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து உமராபாத் காவல்நிலையத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நேற்று இரவு அபிமன்யு, நுங்கு வியாபாரத்திற்காக வெளியூர் செல்வதால் தனது தாத்தாவான சாமுண்டி என்பவரை தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பிற்காக இருக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கவிதா, பிரதீபாவிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இதனை சாமுண்டி தடுக்க சென்றுள்ளார். ஆனால் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சாமுண்டி, நுங்கு வெட்டும் கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனை தடுக்க சென்ற முனியனுக்கும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாமுண்டி மற்றும் முனியனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கவிதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.