பயிர் காப்பீடு தொகை கேட்டு ஆட்சியரகத்தில் விவசாயிகள் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்...

First Published Nov 14, 2017, 8:42 AM IST
Highlights
Farmers take the begging of the soil to ask for the crop insurance sum.


தூத்துக்குடி

பயிர் காப்பீட்டுத் தொகை கேட்டு கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்சட்டி ஏந்தி விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2015-2016-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.29½ கோடி ஒதுக் கப்பட்டது.

இதில் விளாத்திகுளம், புதூர் பிர்கா பகுதிகளில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஆனால், கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஆறு பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

எனவே, பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் தங்களது கைகளில் மண் சட்டி ஏந்தியவாறு, கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுட்டனர்.

பின்னர், அந்த அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாவட்ட தலைவர் ஜெயகண்ணன், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட அவை தலைவர் வெங்கடசாமி, மகளிர் அணி பாப்பா, தாலுகா செயலாளர் சுப்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: "குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்காத வேளாண்மை துறை, வருவாய் துறை, புள்ளியியல் துறையினர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு வருகிற 20-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில் வருகிற 22-ந்தேதி தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அரசு விழாவில் எதிர்ப்பை தெரிவிப்போம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

பின்னர், முற்றுகையிட்ட விவசாயிகளிடம் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அனிதா, வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், "வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க, குழு அமைத்து ஏற்பாடு செய்யப்படும்" என்று உறுதி அளித்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். 

click me!