
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இன்று சென்னை சேப்பாக்கம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் காவிரி டெல்டா விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து நேற்று மனு கொடுத்தனர். காவிரி நதிநீர் பிரச்னை, விவசாயிகள் கடன்தள்ளுபடி உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலாளர் மோகன், மற்றும் திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தருமபுரி, திருச்சி மற்றும் காவிரி டெல்டா விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சென்னை ராஜ்பவனில் நேற்று பிற்பகல் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு கொடுத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன், நாளை அதாவது இன்று சென்னை, சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறினார். காவிரி நிதிநீர் பிரச்சனை தீரும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்.
இந்த நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில், பி.ஆர். பாண்டியன் தலைமையில் டெல்டா விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை, மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக கூறினார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.