இந்த ஒரு விஷயத்தை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் வேண்டுகோள்...

First Published May 4, 2018, 11:00 AM IST
Highlights
Farmers must come forward to do this thing - Minister Bhaskaran request ...


சிவகங்கை 

செயற்கை உரத்தின் பயன்பாட்டினை குறைத்து இயற்கை உரங்களின் பயன்பாட்டினை அதிகப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத் துறையின் மூலம் இந்திய அரசின் கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி ஆட்சியர் லதா தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பின்னர், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் மூலம் 26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். 

அதன்பின்னர் அவர், "நவீன காலத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் வாயிலாக விவசாயிகள் குறைந்த செலவில் தங்களது பணிகளை மேற்கொண்டு அதிக மகசூல் ஈட்டி பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு இந்த விவசாய நல்வாழ்வு பணிமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மண்வளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப உகந்த பயிரினை இட்டு அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். 

அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பங்கள், உணவுகளை பதப்படுத்துதல் முறை, பண்ணை வணிக நிலையங்கள் அமைத்து உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல், பயிர் ஈட்டுறுதி திட்டத்தில் பங்கேற்றுதல் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ஆடு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொண்டு விவசாயிகள் அதிக வருவாயை பெருக்கி கொள்ள வேண்டும். 

தங்கள் பகுதியிலுள்ள வேளாண் அலுவலகத்திலுள்ள விதைகள் மற்றும் உரங்கள் கையிருப்பு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், செயற்கை உரத்தின் பயன்பாட்டினை குறைத்து இயற்கை உரங்களின் பயன்பாட்டினை அதிகப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) ஜெயராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செந்தூர்குமரன், செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மெர்டில் கிரேஸ், மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் பழனீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

click me!