
சேலம்
துணை சுகாதார மையங்களை தனியாருக்கு அளிக்காமல் அரசே தொடர்ந்து நடத்த வலியுறுத்தி சேலத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராமப் பகுதி மற்றும் சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் உஷாராணி (சேலம்) ஜானிஜகான் (நாமக்கல்) ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டமைப்பின் மாநில தலைவர் சகுந்தலா, துணை தலைவர் ரத்தினம், பொதுச்செயலாளர் சவுந்திரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து கிராமப்புற சுகாதார செவிலியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது, "துணை சுகாதார மையங்களை தனியாருக்கு அளிக்காமல் அரசே தொடர்ந்து நடத்திட வேண்டும்,
நான்கு கட்ட பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும்,
2,800-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
மக்கள் தொகை அடிப்படையில் புதிய சுகாதார துணை மையங்கள் அமைக்க வேண்டும்,
மகப்பேறு செவிலியர் கவுன்சில் கலைக்கப்படாமல் தொடர்ந்து நடத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.