பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வறண்ட குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வறண்ட குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ளது பவனமங்கலம். இக்கிராமத்தின் தெற்குப் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. வடக்குப் பகுதியில் கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. தற்போது இவ்விரண்டு ஆறுகளிலும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கிராமத்தின் நடுவில் இருக்கும் பொன்னியம்மன் கோயில் எதிரேவுள்ள குளம் வறண்டு கிடக்கின்றது.
இந்தக் குளத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் ஒன்று உள்ளது. "இந்த வாய்க்காலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் மற்றும் குளத்தில் நீர் நிரப்பவேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதுமட்டுமின்றி, "குளத்திற்குத் தண்ணீர் வராததைக் கண்டித்து" நேற்று பவனமங்கலம் கிராமத்தினர் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடைப்பெற்றது.
தஞ்சாவூரில் உள்ள வீரக்குடி, சொர்ணக்காடு, மணக்காடு, ரெட்டவயல், வெண்ணாறு மற்றும் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள கிராமங்களில் இருக்கும் குளங்களுக்கு பாசனத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும். அதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தின்மூலம் வலியுறுத்தி உள்ளனர்.