ஏரி, குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத நிலையில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக முதல்வர் கூறியதற்கு, "வேணும்னா நேரில் வந்து பாருங்க" என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்
ஏரி, குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத நிலையில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக முதல்வர் கூறியதற்கு, "வேணும்னா நேரில் வந்து பாருங்க" என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் போன்ற இடங்களில் ஏரிகள், குளங்கள் வறண்ட நிலையில் உள்ளன. இவற்றை நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.
இவர்கள், விளங்குளம் ஏரி, உள்ளூர் ஏரி, செல்லுகுறிச்சி ஏரி, ஊமத்தநாடு ஏரி, கொரட்டூர் ஏரி, பள்ளத்தூர் ஏரி, கொண்டிக்குளம் ஏரி, பெரிய ஏரி ஆகிய ஏரிகளைப் பார்வையிட்டனர். அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், "கடைமடைப் பகுதி வாய்க்கால்களை முறையாக தூர்வாராதது அரசின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. இதனால்தான் கடைமடைப் பகுதிகளிக்கு தண்ணீர் வரவில்லை. நீர்வரத்துப் பாதைகளும் அடைப்பட்டு உள்ளது. எனவே, தமிழக அரசு, புதர் மண்டிக்கிடக்கும் பாதைகளைச் சீரமைத்து தண்ணீர் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஒருபக்கம் தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. மறுபக்கம் வறட்சி நீடிக்கிறது. இது நீர் மேலாண்மையில் மாவட்ட நிர்வாகம் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது.
"கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடைந்துவிட்டது" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், இங்கு வந்து பாருங்கள் அனைத்து ஏரி, குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை.
எந்த ஏரியும் முறையாக தூர்வாரப்படவில்லை. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேளாண்மை அமைச்சராக இருக்கும்போதும் இப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பது வேதனைக்குரியது.
இனிமேலும் காலம் தாழ்த்திடாமல் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும்பட்சத்தில் கட்சி பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.