
சிவகங்கை
சிவகங்கையில், கண்மாயில் இருந்து கிராவல் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில், மீதி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையில் சில இடங்களில் பாலத்தின் பணிகளுக்கு மண் தேவை உள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் கிராம கண்மாய்களில் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததையடுத்து நான்கு வழிச்சாலை ஒப்பந்தக்காரர்கள் மண் அள்ளி வருகின்றனர்.
இதேபோன்று மானாமதுரை அருகே உள்ள எஸ்.நெடுங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் கிராவல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் மண் அள்ள வந்த நான்கு வழிச்சாலை பணியாளர்களை முற்றுகையிட்டு மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று செய்களத்தூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அதில், இரண்டு மாதங்கள் மட்டுமே அனுமதி அளித்த நிலையில் மணல் அள்ளும் உரிமம் நிறைவடைய உள்ளதால் ஒப்பந்தக்காரர் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் மண் அள்ளும் பணி தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது தாசில்தார் சுந்தரராஜன், மானாமதுரை காவல் ஆய்வாளர் பரக்கத்துல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாய சங்கத்தினர் கலைந்து செல்ல மறுக்கவே காவலாளார்கள் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கைது செய்தனர்.