
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தை, யானை போன்ற காட்டு விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம்.
அண்மையில் கூட ஊருக்குள் வந்து மூன்று பேரை கொன்ற ஒற்றை காட்டு யானை மயக்க ஊசி போடப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மஹாராஜாகடை கிராமத்தை ஒட்டிய மேலுகொல்லை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்ற 62 வயது விவசாயி, வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார்.
வழக்கம்போல இன்றும் கால்நடைகளுக்கு இரை போடுவதற்காக சென்ற ராமமூர்த்தியை நோக்கி சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்துள்ளது. அதைக் கண்ட விவசாயி ராமமூர்த்தி சிறுத்தையிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையை தாக்கியுள்ளார். சிறுத்தையின் கால், கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் ராமமூர்த்தி அரிவாளால் தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்துவிட்டது. சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த ராமமூர்த்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.