
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் குவிந்துள்ளனர். விஜய்யை பார்க்க வேண்ம் என்ற ஆர்வத்தில் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் குவிந்தனர்.
மாநாடு சரியாக மாலை 4 மணியளவில் தொடங்கியது. முன்னதாக நாட்டுப்புற இசையுடன் விழா தொடங்கிய நிலையில் கட்சியின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாடல் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடையில் அமர்ந்திருந்த தனது தாய், தந்தையரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், அமைப்பாளர்களுடன் கை குழுக்கி வரவேற்றார். இதன் தொடர்ச்சியாக மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ரேம்ப் வால்க் சென்ற விஜய் தொண்டர்களை நோக்கி கை அசைத்தபடி சுமார் 250 மீட்டர் நடந்து சென்றார். அப்போது கட்சியின் கொடியை விஜய்யை நோக்கி எறிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரேம்ப் வால்க் நிறைவு பெற்றதும் விஜய் மீண்டும் தனது இருக்கையை நோக்கி சென்றார். அப்போது விஜய்யை பார்த்துவிட்டோம் என்ற திருப்தியில் பின் பகுதியில் குவிந்திருந்த தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். போதிய இருக்கை வசதி இல்லாத காரணத்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியதாக சொல்லப்படுகிறது.