
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பேரூராட்சி அலுவலக ஊழியர்களை நூதன முறையில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 29-ஆம் தேதி அதன் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர் தங்களை தனியார் மாத இதழ் ஒன்றின் நிருபர்கள் என்று கூறி அறிமுகம் செய்துகொண்டனர்.
பின்னர், அவர்கள் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகமுள்ளதாகவும் இது குறித்து பத்திரிகையில் செயல் அலுவலர் பெயருடன் செய்தி வெளியிடாமல் இருக்க தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் ஊழியர்களிடம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
இதன்பின்னர் அவர்கள், தாங்கள் மீண்டும் வரும்போது தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த மூவரும் மீண்டும் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களின் பத்திரிகையின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளதால் பணம் தர வேண்டும். அல்லது பேரூராட்சியில் சுத்தம் இல்லை என செயல் அலுவலர் பெயர் மற்றும் படங்களுடன் செய்தி வெளியிடுவோம் என்று மீண்டும் மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேரூராட்சி ஊழியர்கள் உடனே நாகப்பட்டினத்தில் உள்ள சில பத்திரிக்கையாளர்களை தொடர்புகொண்டு இதுகுறித்து கூறியுள்ளனர். உடனே நாகையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் போலி நிருபர்கள் என்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து வேளாங்கண்ணி காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் காவலாளார்கள் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம், பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன் (39), சென்னை சிட்லபாக்கம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் மகன் கோபாலகிருஷ்ணன் (32), சீர்காழி எடமணல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துராஜா (21 ) என்பதும், இவர்கள் போலி நிருபர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள், போலி நிருபர்கள் மூவரையும் மற்றும் கார் ஓட்டுநர் பழனிவேல் (45)என்பவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.